தேசம்நெற்: சிறீ ரெலோவை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றியது?
உதயன்: புலிகள் ரிஎன்ஏ யிலுள்ள அமைப்புகளை தனது ஆதரவு அமைப்பாக செயற்படுத்தத் தொடங்கியபோது புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்துப் போய்விட்டார்கள். இது ரிஎன்ஏயிலுள்ள எல்லா அமைப்பினர்க்கும் பொருந்தும். ரெலோ ஈபிஆர்எல்எவ் ரியுஎல்எவ் போன்ற தலைவர்களை கூப்பிட்டு புலிகள் கதைத்துவிட்டு கடந்தகால பிரச்சினைகளுக்கு எவ்வித பதிலும் இல்லாமல் மறைத்துவிட்டு தங்களுடன் சேர்ந்து வேலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்பு நாங்கள் - ரெலோவில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள்- ஒன்றாக தனித்து செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புலிகள் தமக்கு ஆதரவளித்த இயக்கங்களை தமக்காக செயற்பட வைத்துவிட்டனர். எமது தலைவரையும் 300 போராளிகளையும் கொன்ற புலிகள் தற்போதய தலைமையை கூப்பிட்டு கதைத்து தமக்காக பேச வைத்துள்ளார்கள். இதேபோல ஈபிஆர்எல்எவ் இலும் நடந்துள்ளது.
நாங்கள் ரெலோவின் தனித்துவத்தையும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதற்காகவும் சிறீ ரெலோவை ஆரம்பித்தோம். இதேபோல நாபா ஈபிஆர்எல்எப் உருவாக்கப்பட்டுளளது.
தேசம்நெற்: இப்போது உங்கள் சிறீ ரெலோவில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? எங்கெங்கே உங்கள் அலுவலகங்கள் செயற்ப்படுகிறது?
உதயன்: முழுநேர அங்கத்தவர்களாக 250 பேர் மட்டிலும் வட - கிழக்கு மாகாணங்கள் எல்லாவற்றிலம் செயற்ப்படுகின்றோம்.
தேசம்நெற்: உங்களுக்கான பாதுகாப்பு விடயங்களை யார் செய்து கொள்கிறார்கள்?
உதயன்: எல்லா முகாம்களுக்கும் பொலீசார் பாதுகாப்பு தருகிறார்கள் வவுனியாவில் யாழ்பாணத்தில் மட்டக்களப்பில் கொழும்பிலும் பொலீஸ் பாதுகாப்பு அரசினால் தரப்பட்டுள்ளது.
தேசம்நெற்: இன்று இரண்டு ரெலோ இயங்குகிறது. ஒன்று புலிகளுடனும் மற்றையது அரசடனும் சேர்ந்து இயங்குகிறது. இதில் என்ன தனித்துவம் கொள்கை உள்ளது?
உதயன்: ரெலோவின் முக்கிய உறுப்பினர்கள் ரெலோ என்று இருந்தால் கூட நல்லது ஆனால் அப்படி இல்லை அவர்கள் பல காலமாக ரெலோ என்று அறிக்கை விடுவதில்லை அவர்கள் புலி சார்பான பிரச்சாரங்களையே செய்கிறார்கள்.
தேசம்நெற்: இன்றைய காலத்தில் அப்படி ஒரு பிரச்சாரம் தேவையா? ரெலோ ஈபிஆர்எல்எப் என்று கட்சி அரசியல் தேவையா? மக்கள் தேவைகள் பற்றி மக்கள் சார் அரசியல் தானே பேச வேண்டும். ஏன் நீங்கள் கட்சி அரசியல் பற்றி கதைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
உதயன்: மக்கள் கட்சி என்று ஒன்று இல்லையே. புலிகள் தாங்களும் மாவீரர்களும் பற்றித்தான் கதைக்கிறார்களே அல்லாமல் இதில் மக்கள் சம்பந்தப்படவில்லை. மக்கள் சார்ந்த நடவடிக்கைகள் என்று புலிகள் சொல்வதற்கு எதுவுமில்லை. புலிகள் கடற்புலிகள் ஆகாயப் புலிகள் என்று சொல்லுகினமே தவிர மக்களின் தேவைக்கான புலிகள் என்று ஒன்று இல்லைத்தானே?
புலிகளால் பாதிக்கப்பட்டோம் என்பது இரண்டாவது தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் என்று யார் பேசுகிறார்கள்.
தேசம்நெற்: நீங்கள் என்ன மக்கள் வேலைகள் செய்கிறீர்கள்? மக்கள் சார்பான என்ன கொள்கைகள் வைத்திருக்கிறீர்கள்? மக்கள் தொடர்பாக என்ன சேவைகள் செயற்ப்பாடுகள் செய்கின்றீர்கள்?
உதயன்: நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. மக்களுக்கான சேவைகளை செய்யும் பணியாளர்களாக இருக்கிறோம்.
No comments:
Post a Comment