Sunday, March 27, 2011

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனும்..!! -சித்திறெஜினா (தொடர்கட்டுரை பாகம்-23)

valveddituraiவிண்ணில் பறக்கும் வானத்து  பறவை ஒன்றை ஒரு திசையிலிருந்து  வேடனொருவன்  தன் அம்பினால் அடித்து வீழ்த்தும் போது அது கீழே விழுந்து துடிதுடித்து மடிந்து போவதை அவன் கூடவே இருக்கும் அவன் பிள்ளைகளும் பார்க்க நேரிடுகிறது. அதே பறவையை வேறு ஒரு திசையில் இருந்து நோக்கும் ஓவியன் ஒருவன் தன் தூரிகையினால் ஒரு வண்ணச் சித்திரமாக வரைவதை அவன் வீட்டுப் பிள்ளைளும் பார்த்து மகிழ நேரிடுகிறது. பறப்பதோ ஒரே பறவை ஆனால் அதை நோக்கும் மனிதர்கள் வித்தியாசமான வாழ்க்கை அமைப்பு கொண்டவர்களாக இருப்பதால் காட்சிகளும் வேறுபடுகின்றன… அது போலவே வாழ்க்கை என்பதும் அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் வித்தியாசமான சமூகச் சூழலில் பிறந்து வளரும் பிள்ளைகளை அந்தச் சூழலுக்கேற்றபடி இயற்கை அவர்களை வித்தியாசமான குணநலம் கொண்ட மனிதர்களாக மாற்றி அமைத்து விடுகிறது. ஆகவேதான் தாங்கள் பெற்று வளர்க்கும் பிள்ளைகள் சீர்கெட்ட சமூகச் சூழ்நிலைகளால் பாதிப்புக்குள்ளாகாதபடி அவர்களை பாதுகாத்து வளர்ப்பது பெற்றோரின் முக்கிய கடமையாக இருக்கிறது. அந்தப் பிள்ளைகளின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக அந்த வேடனைப் போல் இல்லாமல் இந்த ஓவியனைப் போல் தங்கள் வாழ்க்கை முறையை பெற்றோர்கள் மாற்றி அமைப்பதும் அவசியமானதொன்றாக இருக்கிறது. இதைத்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே” என்று பாடி வைத்தார்.
சீர்கெட்ட  சூழ்நிலைகளில் வளரும் பிள்ளைகள் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்கள் குணநலங்கள் உளரீதியாக பாதிப்படையும் சாத்தியக்கூறுகள் நிறைய இருப்பதாக பல மனோதத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். அத்துடன் ஒரு பிள்ளை வயதுக்குத் தக்கபடி மன வளர்ச்சியடைய வேண்டும். அது அந்தப் பிள்ளைக்கும் சமூகத்திற்கும் ஆரோக்கியமானது. ஒரு பிள்ளையின் வயதுக்கு மிஞ்சிய சிந்தனைகளும் செயற்பாடுகளும் சமூகத்திற்கு தீமை விளைவிக்குமே தவிர நன்மை எதுவும் விளைவிக்கப் போவதில்லை. இதை நமக்கு தெளிவு படுத்தவே நம் முன்னோர்கள் “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் முன் பெரியவர்களுடன் புலிக்கொடி ஒன்றைப் பிடித்தபடி “ஐ வோன்ட் டமில் ஈலம்” என்று தன் மழலைமொழியில் குரல் எழுப்பும் அந்த ஏழு வயது சிறுமியை கடந்து செல்லும் நான் அழகான பொம்மை ஒன்றை வாங்கி அதை ஒரு வண்ணப் கடதாசியில் சுற்றி, றிப்பன் ஒட்டி, அதன் மேல் கொட்டை எழுத்துக்களில்”தமிழ் ஈழம்” என்று எழுதி அவளைத் தனியாக அழைத்து, “ஹைய் லிட்டில் ஏஞ்சல் இந்தா நீ கேட்ட டமில் ஈலம் போய் உன் பிரண்ட்ஸ்சுடன் விளையாடு” என்று கூறினால் அவள் அதை ஆசையுடன் பெற்றுக் கொண்டு “தாங்க் யு சோ மச் ஆன்ட்டி” என்று கூறி துள்ளிக் குதித்தபடி தன் தாயிடம் ஓடிச் சென்று “மம்மி நான் கேட்ட டமில் ஈலத்தை அந்த சூப்பர் ஆன்டி வாங்கிக் கொடுத்துட்டா. இதைக் கொண்டு போய் என் பிரண்ட்ஸ்சுடன் விளையாடலாமா? பிளீஸ்…” என்று வெள்ளாத்தியாக கேட்கும்.
ஆம் அதுதான் அந்தப் பிஞ்சின் அறிவுக்கு எட்டிய தமிழ் ஈழம். அதன் வயதுக்குரிய சிந்தனையோ தனக்கு வேண்டாத இந்த ஆர்ப்பாட்டம் எப்போது முடிந்து தனது நண்பர்களுடன் தான் விளையாடப் போகலாம் என்பதிலேயே லயித்திருக்கும். “ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்று இந்தச் சின்னஞ் சிறுசுகளுக்காகத்தானே அன்றே பாடி வைத்து விட்டுப் போனான் பாரதி. ஆகவே வயதுக்கேற்றபடி வாழ அவர்களை அனுமதியுங்கள். இந்த கேடு கெட்ட அரசியல் கொடுமைக்குள்  அவர்களை இழுக்காதீர்கள். நடந்து முடிந்து வானில் பறந்த அந்த புக்கரா கதை சொல்லி அவர்களை பயமுறுத்தாமல் பாரதி சொல்லியபடி இன்று வானில் பறக்கும் அந்த “வண்ணப் பறவைகளைக் கண்டு மனதில் மகிழ்சி கொள்ள” அவர்களை அனுமதியுங்கள் …
வடக்கில் பல விடுதலை இயக்கங்கள் தோன்றி தமிழ்ஈழ வேட்கை சூடுபிடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலும்  கிழக்கில் எந்தவிதமான விடுதலை இயக்கங்களும் தோன்றியிருக்கவில்லை. அதற்குரிய காரணம் மூவின மக்களும் பிறந்து வளர்ந்த காலம் முதல் இனபேதம் அற்ற ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஒன்று அங்கே நிலவி வந்தது. அதே சமயத்தில் தமிழர்கள் மட்டுமே செறிந்து வாழும் யாழ்ப்பாணத்தில் பல்லினங்கள் ஒன்றுபட்டு வாழும் சூழ்நிலை இல்லாமல் போய் விட்டதால் இங்குள்ள இளைஞர்கள் மத்தியில் இனத்துவேச உணர்வை புலிகளால் இலகுவில் விதைக்க முடிந்தது.
பின்னர் பிரபாகரனின் பிரதிநிதியாக கருணாஅம்மான் அங்கே நியப்பிக்கப்பட்டு தமிழ்ஈழ வேட்கையை அந்த இளமை துடிப்புள்ள அப்பாவி இளைஞர்கள் மத்தியில் தோன்ற வைத்து அதை போர் வெறியாக மாற்றி அந்த துடிப்புள்ள இளைஞர்களை தனக்கு பலம் சேர்க்கும் முகமாக போர் முனைகளில் பலி கொடுத்து அதில் பிரபாகரன் தனக்கு பெரும் பெயரும் புகழும் ஏற்படுத்திக் கொண்டது மறுக்க முடியாத உண்மையாகும்.
பிரபாகரன் பிறந்து வழர்ந்த வல்வெட்டித்துறையை எடுத்துக் கொண்டால் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியையும், அதையே இரண்டு முறை நீந்திக் கடந்ததுடன் மேலும் ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற ஆழிக்குமரன் ஆனந்தனையும் ஈன்றெடுத்த பெருமை உள்ள வல்வெட்டித்துறைக்கு அங்கே கள்ளக்கடத்தலில் கொடிகட்டிப் பறக்கும் படகுகளின் அணிவகுப்பால் அந்தப் பெருமை அடிபட்டுப் போகிறது..
தலைமுறை தலைமுறையாக அங்கே நடைபெற்று வரும் கள்ளக் கடத்தல் என்ற சமூக விரோதச் செயலை அங்கே தடுத்த நிறுத்த எவருமே இதுவரை காலமும் முயற்சிக்கவில்லை. ஏனெனில் கள்ளக் கடத்தலையும் தங்களுடைய பெருமைக்குரிய சின்னமாக அவர்கள் கருதுவதே இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். நவரத்தினசாமியையும் ஆழிக்குமரனையும்  பற்றி பேசப்படுவதை விட இதே ஊரில் 1940 களில் வாழ்ந்த கள்ளக் கடத்தலில் முடிசூடா மன்னனாக விளங்கிய ஹிட்டர் கந்தசாமி என்பவரை பற்றி இவர்கள் அதிகமாக பேசிக் கொள்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் அந்தக் காலத்திலேயே பென்ஸ் கார் வைத்திருந்த குபேரன் இவர். கடத்தல் சமயத்தில் பிடிபட்டால் ஒரு கையில் ரிவோல்வரையும் மறுகையில் பணக் கட்டையும் வைத்துக் கொண்டு உனக்கு இது வேண்டுமா அல்லது அது வேண்டுமா என்று போலிஸ்காரர்களுடன் பேரம் பேசிய துணிந்தகட்டை அவர் என்றும் இவரால் பல போலிஸ்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள் என்றும் ஒரு முறை கடத்தல் பொருட்களுடன் இவரே காரைச் செலுத்தி வந்து இராணுவம் இவரை விரட்டியபோது அவர் ரெயில் தண்டவாளத்திலேயே காரை ஏற்றி ஓட்டி அவர்களிடமிருந்து தப்பி வந்த ஜாம்பவான் என்றும் இவரைப் பற்றி பல வல்வெட்டித்துறை பெருசுகள் இன்றும் பெருமையாக பேசிக் கொள்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து கடத்தல் பொருட்களுடன் அதிவேக வள்ளங்களில் இவர்கள் திரும்பி வரும்போது இலங்கைக் கடற்படை இவர்களை காண நேரிட்டு படகை நிறுத்தும்படி கட்டளையிட்டாலும் இவர்கள் அதை சட்டை செய்யாமல் படகின் வேகத்தை அதிகரிக்கும் போது இவர்கள் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பல சம்பவங்கள் இங்கே நடைபெற்றதுண்டு. இந்தக் கொலைகள்  கள்ளக் கடத்தல் சம்பந்தப்பட்டது என்பதால் இதை  பொலிசிலும் முறையிட முடியாத இக்கட்டான நிலை இவர்களுக்கு. ஆகவே இக்கொலைகள் அம்பலத்து வராமல் மூடி மறைக்கப்பட்டன. தங்கள் கடத்தல் தொழிலுக்கு இடையூறாக இருக்கும்  இராணுவமும் பொலிசாரும் இங்குள்ள மக்களுக்கு பரம்பரை பரம்பரையாக பரம வைரிகள்.
இப்படியான சூழ் நிலையில் பிறந்து வளர்ந்த பிரபாகனுக்கு சிறுவயதிலேயே இராணுவத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கக் கூடிய சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன. மேலும் இந்த இராணுவமும் பொலிசாரும் பெரும்பாலும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிங்கள இனத்தின் மீதும் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. சமூக விரோதியென்று  சுண்டைக்காய் களவெடுத்தவனை சுட்டுப் பொசுக்கிய பிரபாகரன் இந்தக் கடத்தல் காய்களை கண்டு கொள்ளாமல் விட்டதற்கு காரணம் சிறுவயதிலேயே இவைகள் சமூக விரோதச் செயலாக அல்லாமல் அது தன் இனத்தின் மரபுத் தொழில் போன்ற எண்ணங்கள் அவர் மனதில் பதியப்பட்டிருக்க வேண்டும்.
அந்த எண்ணம்தான் பிரபாகரனுக்கு கடத்தல் மன்னன் பத்மனாதனிடம் நட்புறவு பூண்டு ஆயுதங்கள் கடத்த வழி வகுத்தது.. மேலும்  யாழ்ப்பாணத்தில் புலிகள் நிழல் ஆட்சி நடத்திய காலப்பகுதியில் இதுவும் ஒரு சமூக விரோதச் செயல்தான் என்று பிரபாகரன் தீர்மானித்து வல்வெட்டி கடத்தல் காரர்களை தனது பாணியில் தண்டிக்க முற்பட்டிருந்தால் அந்தக் கடத்தல் மன்னர்களே இலங்கை அரசாங்கத்தின் பொருட் செலவைக் குறைத்து மேலும்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பெருமை சேர்க்க விடாது  தடுத்து என்றோ தங்கள் பாணியில் பிரபாகரனுக்கு முடிவு கட்டியிருப்பார்கள்.
உலகின் விடுதலைப் போராட்ட வரலாறுகளை எடுத்துக் கொண்டால் அவைகளுக்கு தலைமை வகித்த மகாத்மா காந்தியோ, நெல்சன் மண்டெல்லாவோ, மார்ட்டின் லூதர் கிங்கோ எவருமே தங்கள் முப்பதிற்கு மேற்பட்ட வயதிலேயே அவைகளை முன்னெடுத்துச் சென்றனர். அவர்களுக்கு துணையாக செயல்பட்ட தொண்டர்களும் பெரும்பாலும் அவர்களின் வயதை ஒத்தவர்களாகவே இருந்தனர். அதனால்தான் அவர்களது போராட்டங்கள் வெற்றியடைந்தன. இதற்குரிய முக்கிய காரணம் இவர்கள் தங்கள் நாட்டின் அரசியல் சூழ்நிலையை நன்றாக அறிந்து மனித உயிரிழப்புகள் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான வழியில் தங்கள் போராட்டத்தை வடிவமைப்பதற்குரிய முதிர்ச்சியும் பக்குவமும் அவர்களுக்கிருந்தமையே காரணமாகும்.
முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு ஒரு விடுதலைப் போராட்டத்தை சரியான பாதையில் வழி நடத்திச் செல்வதற்குரிய அனுபவமோ, அரசியல் அறிவோ, போதாமல் இருப்பது மட்டுமின்றி அதற்குரிய பொறுமையும் அவர்களிடத்தில் போதுமானதாக இருக்க சாத்தியமில்லை. மேலும் அவர்களிடம் இருக்கும் உணச்சிக் கொந்தளிப்பை மட்டுமே மையமாக வைத்து நடத்தப்படும் போராட்டம் வீணான வன்முறைகளை தூண்டும் வழியை நோக்கி நகருமே தவிர ஒரு ஆரோக்கியமான வழியை நோக்கி முன் நகர்த்தப்பட மாட்டாது என்பது யதார்த்த பூர்வமான உண்மையாகும்.
துரதிஸ்டவசமாக இலங்கையில் தமிழர்களின் போராட்டதிற்கு புறப்பட்ட முன்னாள் தலைவர்களிடம் வயது முதிர்ச்சியிருந்தும் அரசியல் முதிர்ச்சி போதாமல் இருந்த காரணத்தால் அவர்கள் இனத்துவேச அடிப்படையில் ஒரு விடுதலையை வென்றெடுக்க முற்பட்டு அதற்கு ஆதரவாக  இளைஞர்களையும் இதற்குள் இணைத்து அவர்களை இன ரீதியாக ஊக்குவித்து முடிவில் பல மனிதப் படுகொலைகளுக்கு அவர்கள் வழிவகுத்தார்கள்..
இப்படியாக இவர்கள்  இணைத்துக் கொண்ட இளைஞர்களில் ஒருவர்தான் சிவகுமாரன். இவன் பிறந்து வழர்ந்த  ஊராகிய உரும்பிராய் பல புராதான கோயில்கள் கொண்ட ஊராகவும், இங்கு விளையும் மரவள்ளிக் கிழங்கு யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்றதாயும் இருந்த போதிலும் சிவகுமார் போன்ற எதற்கும் கட்டுப்படாமல் தான் தோன்றித் தனமாக ஏன் செய்கிறோம்?  எதற்காக செய்கிறோம்? என்று சிந்திக்காமல் செயல்படும் பல இளைஞர்கள் உருவாவதற்கும் உரும்பிராயின் சமூகச் சூழ்நிலையும் ஒரு காரணமாக அமைந்திருந்தது இதுபற்றி என் அடுத்த பாகத்தில்… (தொடரும்)ஆக்கம்.. -சித்திறெஜினா(இத்தொடர் கட்டுரையை அதிரடியின் தொடர்கட்டுரைகள் பகுதியில் முழுமையாகப் பதிவு செய்துள்ளோம்!!)

No comments:

Post a Comment